torsdag 10. januar 2013

தை பொங்கல்.

சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.


 பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம். பரிகாரத்திற்கும் தையே சிறந்தது! ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர். நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான்.

 இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது. தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும். சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர். தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம்.

 மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை.

Ingen kommentarer:

Legg inn en kommentar