søndag 2. desember 2012

கண்ணதாசன்

கண்ணதாசன்

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன் TUESDAY, 16 OCTOBER 2012 17:05 HITS: 1312 கவியரசர் கண்ணதாசன் இன்றைய தமிழக மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வாழக் கூடிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் பெருந்தலைவர்கள் அனைவரும் போற்றி நிற்கும் மாபெரும் கவிஞர் தனது சொந்த அனுபவங்களை வாழ்க்கையில் தான் அனுபவித்த இன்ப துன்பங்களை திரையிசைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய மாபெரும் கவிஞர். இன்றும் அவரது திரையிசைப் பாடல்களை வானொலியில், காண் ஒளியில் நாம் கேட்டும் பார்த்தும் மகிழ்கின்றோம். எமது வாழ்வில் சோதனையும் வேதனையும் வரும் போது கவியரசரின் தத்துவப் பாடல்களே எமக்கு துன்பங்களை அகற்றுகின்ற மருந்தெனலாம். எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான் , கூறவும் மாட்டான், ஆனால் கவியரசரோ ஒழிவு மறைவின்றி தனது திரையிசைப் பாடல்கள் மூலம்தனது தவறுகளையும் உண்மைகளையும் தெரிவித்திருக்கின்றார்.
கண்ணதாசன்
 கவியரசர் தனது வாழ்க்கையில் பட்ட பெருந் துன்பங்களையும் பாடல்கள் மூலம் கவிதைகள் மூலம் தெரிவித்த கள்ளங்கபடமற்ற காவியத் தாயின் இளைய மகன். 8 ஆம் வகுப்பு வரை அவர் கல்வி கற்றிருந்தாலும் கண்ணனின் அருள் பெற்றதால் பெருங்கவிஞனாகி கண்ணனைத் தமிழ் அன்னையை இறுதி மூச்சுவரை போற்றிக் காத்து நின்ற அற்புதக் கவிஞர். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்கள் அவரது இறவாக் கவிதைகளைப் படித்து மகிழ்ந்து அன்றும் இன்றும் என்றுமே போற்றி நிற்பார்கள். அறிஞர் அண்ணா இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி போன்றோர் இன்றும் கவியரசரைப் போற்றிப் பாராட்டி நிற்கின்றார்கள். கவியரசர் பத்திரிகை ஆசிரியராக, அரசியல் வாதியாக, நடிகராக, படத் தயாரிப்பாளராக, திரைப்பட வசன கர்த்தாவாக பல்வேறு முகங்களில் வெளிப்பட்டிருக்கிறார். ஐயாயிரத்துக்கு மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். நாளாந்தம் அவர் புகழைத் தமிழகத்து தொலைக்காட்சிகளில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இன்று அவரது நூல்களை காந்தி கண்ணதாசன் நாளாந்தம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதே போலவே அவரது புதல்வியார் விசாலி கண்ணதாசனும் தந்தையாரின் புகழைக் காத்து நிற்கின்றார் என்பது யாவரும் அறிந்த பேருண்மை, இன்றும் 30 வருடங்களாக கவியரசரின் குடும்ப அங்கத்தினருடன் இலங்கையில் கவியரசர் புகழ்பாடி உறவை வைத்துக்கொண்டிருக்கின்றேன்.
விசாலி 
1994 ஆம் ஆண்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா சென்னை 17 தியாகராஜ நகரில் கவியரசருக்கு உருவச் சிலை அமைத்து கவிஞரைப் பாராட்டி நின்றார் எமது அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் சார்பாக எனது பணியாக மன்றத்தின் ஸ்தாபக தலைவர் என்ற வகையில் கவிஞருக்கு உருவச் சிலயை 1995 ஆம் ஆண்டு அனைத்து இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் புகழ் பூத்து நிற்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்தேன். அதேபோல் வள்ளுவப் பெருமானின் உருவச் சிலையையும் அன்பளிப்புச் செய்தேன். அவைகளை இன்றும் என்றும் பாதுகாத்து நிற்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு நன்றி கூறுகிறேன். கண்ணதாசனின் 31 ஆவது நினைவு தின விழா வெகு விமர்சையாக வெகு விரைவில் தமிழ்ச் சங்கத்தில் நிகழ இருக்கிறது. அவ்விழா தமிழ் மக்கள் மறக்க முடியாத விழாவாக அமையும் என்பது எனது நம்பிக்கை. அதனால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அமைவிடம் அதிகூடிய பெருமை பெறும் என்பதனைப் பொறுத்திருந்து மகிழ்ச்சி அடைவோம். எல்லாப் புகழும் இறைவனுக்கு அப்புகழ் கவியரசர் கண்ணதாசன் நாமத்துக்கு உரியதாகுக. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வாழ்க கண்ணதாசன் நாமம் வேலணை வேணியன் அகில இலங்கை கண்ணதாசன் மன்ற ஸ்தாபக தலைவர்.

Ingen kommentarer:

Legg inn en kommentar